Home>உலகம்>பிலிப்பைன்ஸில் புயல்...
உலகம்

பிலிப்பைன்ஸில் புயல் பேரழிவு – 114 பேர் உயிரிழப்பு

byKirthiga|about 1 month ago
பிலிப்பைன்ஸில் புயல் பேரழிவு – 114 பேர் உயிரிழப்பு

புயல் கல்மேகி – பிலிப்பைன்ஸ் அவசரநிலை அறிவிப்பு!

114 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன நிலையில் அவசரநிலையை அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கம் செய்த கல்மேகி புயல் இதுவரை 114 பேரின் உயிரை பறித்ததோடு, 127 பேர் காணாமல் போன நிலையில், அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் அவசரநிலை (State of Emergency) அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பெரும்பாலானோர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 127 பேர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் புதன்கிழமை தென்கிழக்காசிய கடல் வழியாக வியட்நாமை நோக்கி நகர்ந்தது.

வியட்நாமிலும் தற்போது கடும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோ சி மின் நகரம் கடும் மழையும் உயர் அலைகளும் எதிர்கொள்வதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அங்குள்ள சில தாழ்வான பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் குடிமக்களில் சுமார் 20 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5.6 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

அதிபர் மார்கோஸ் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், தேசிய அளவில் "அவசரநிலை" அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு விரைவாக நிதி உதவிகளை வழங்கவும், உணவுப் பொருட்களின் கையிருப்பை தடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பசிபிக் கடலில் உருவாகியுள்ள மற்றொரு வெப்பமண்டல புயல், அடுத்த வாரம் வட பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிபர் மார்கோஸ், “இரண்டு புயல்களின் தாக்கத்தால் நாட்டின் மூன்றிலிரண்டு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதே நேரத்தில், புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று மனிதாபிமான உதவிகளை வழங்கிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று, அகுசான் டெல் சூர் மாகாணத்தில் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர்.

செபூ மாகாணம் இந்த புயலில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு மட்டுமே 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் காணாமல் போனுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் தாக்கிய போது வெள்ளநீர் வீடுகளையும் வாகனங்களையும் அடித்து சென்றது. பலர் தங்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி உதவி கேட்டு கத்தினர்.

செபூ மாகாண ஆளுநர் பமிலா பாரிகுவாட்ரோ, “நாங்கள் செய்யக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனால் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது பல ஆண்டுகளாக நடந்துவரும் சட்டவிரோத மணல் மற்றும் கல் சுரங்கப் பணிகளால் நதிகள் அடைந்து வெள்ளம் அதிகரித்திருக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், பிலிப்பைன்ஸ் முழுவதும் பாதுகாப்பு திட்டங்களில் ஊழல் மற்றும் தரமற்ற வெள்ளக் கட்டுப்பாட்டு பணிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சமீபத்தில் மக்கள் போராட்டத்திற்கும் வழிவகுத்துள்ளன.

பிலிப்பைன்ஸ் நாடு வருடத்திற்கு சராசரியாக 20 புயல்களையும் நிலநடுக்கங்களையும் சந்திக்கும் மிகுந்த பேரிடர் அபாய நாடாகும். இதற்கிடையில், செபூ மாகாணம் கடந்த செப்டம்பர் 30 அன்று ஏற்பட்ட 6.9 அளவு நிலநடுக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

இப்போது கல்மேகி புயல் தாக்கம் அந்த நாட்டில் இதுவரை ஏற்பட்ட மிகக் கடுமையான இயற்கை பேரிடராகப் பதிவாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்